13 வயது சிறுவன் மருத்துவப் படிப்பை முடிப்பதைப் பற்றியும், 18 வயதில் ஒருவன் முனைவர் பட்டம் பெறுவதைப் பற்றியும், 6 வயதுக் குழந்தை 1330 திருக்குறளை ஒப்புவிப்பதையும், நாம் இப்போதும் அப்போதுமாய் செய்தியில் பார்க்க/படிக்க நேரும். இவ்வாறான ஒரு செய்தியைப் பார்க்கும் போது நம் மனதில் என்ன தோன்றும்? மகிழ்ச்சியா? ஆச்சர்யமா? வெறுப்பா? சரியாகச் சொல்ல முடியாது. எல்லாம் கலந்த ஒரு மன நிலையாகக் கூட இருக்கலாம்... ஏன் இந்தக் குழந்தைகளால் சாதிக்க முடிந்ததை நம்மால் சாதிக்க முடியவில்லை? 40 வயதாகியும் இந்த தினசரி வேலையைக் கட்டிக் கொண்டு அழுவது எதனால்? செய்தியில் இடம்பெறுமாறு ஏன் எதையும் செய்ய முடியவில்லை? இவற்றில் எதாவது ஒன்று நமக்குக் கண்டிப்பாகத் தோன்றியிருக்கும். எனக்குத் தோன்றியிருக்கிறது. எப்போதாவது இந்த "சாதனையாளர்களின்" உண்மையான மன நிலையை நம்மால் அறிய முடிந்திருக்கிறதா? இந்த "சாதனைகளைச்" செய்வதற்காக அவர்கள் இழந்த குழந்தைப் பருவத்தைப் பற்றி நாம் எப்போதாவது அறிந்திருக்கிறோமா? இதுபோன்ற நேரங்களில் தான் சினிமா என்னும் திரையுலகம் நம் உதவிக்கு வருகிறது. கற்பனையாக இருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு சில நல்ல படங்கள் வந்து நம் அகக் கண்ணைத் திறந்து வைப்பதுண்டு. இரண்டு சம்மந்தமே சம்மந்தமில்லாத திரைப்படங்கள் பற்றி நான் இங்கே சொல்லப் போகிறேன்.
விட்டுஸ் (Vitus) என்னும் ஒரு ஜெர்மன் திரைப்படம், குட் வில் ஹண்டிங் (Good Will Hunting) என்னும் அமெரிக்கத் திரைப்படம். இவ்விரண்டு படங்களுமே மேதாவிகளைப் (Genius-ஐ வேறெப்படி மொழிபெயர்ப்பது?) பற்றியது -- அதிலும் இளம் மேதாவிகளைப் பற்றியது. அவர்களின் திறமைகளைக் காட்டிலும் சொந்த வாழ்வினை ஆழமாக அலசிய படங்கள்.
ஒரு பொறியாளரின் குடும்பத்தில் பிறந்த விட்டுஸ் ஒரு இளம் இசைக்கலைஞன். 6-7 வயதிலேயே அவன் மிகத் திறமையாக பியானோ இசைக்க வல்லவன். அவனுடைய பெற்றோர் அவனை ஒரு மேஸ்ட்ரோ (Maestro) ஆக ஆக்கவும், இளம் வயதிலேயே நிறைந்த புகழை அவன் மூலம் அடைய விரும்புகின்றனர். ஊரின் மிகச்சிறந்த பியானோ ஆசிரியரிடம் அவனுக்குக் கற்பிக்கின்றனர். நம் விட்டுஸ் அவனுடைய தாத்தாவிடம் மிகவும் அன்புடன் இருக்கிறான். தாத்தா அவனுக்குப் பல விசயங்களைக் கற்றுத் தருகிறார் -- விமானம் ஓட்டுவது உட்பட! விட்டுஸிற்கு தன்னைவிட வயது அதிகமான ஒரு பெண்ணிடம் காதல் வருகிறது. அந்தப் பெண் இவனை ஏற்க மறுக்கிறாள். 18 வயதுப் பெண் எப்படி ஒரு 12 வயதுப்பையனை ஏற்றுக் கொள்வாள்? ஒரு கட்டத்தில் விட்டுஸிற்கு அவனுடைய வாழ்க்கை மீது வெறுப்பு உண்டாகிறது. நிற்காத பயிற்சியும் தேவையற்ற கவன ஈர்ப்புகளும் அவனைச் சோர்வடைய வைக்கிறது. பையன் ஒரு விபத்தில் தன்னுடைய திறமை அனைத்தையும் இழப்பதாகக் காட்டுகிறார்கள். அவனுடைய தந்தை வேலை இழக்கிறார் -- வீடு சிரமத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் விட்டுஸ் தன்னுடைய உண்மையை -- தன் திறமை இழக்காத விஷயத்தையும், தன்னுடைய நாடகத்தையும் பற்றி -- தாத்தாவிடம் சொல்லுகிறான். தாத்தாவின் பணத்தை இவன் பங்குச் சந்தையில் முதலீடு செய்து பெருத்த லாபம் அடைகிறான் -- தனக்கு விருப்பமான வாழ்க்கையை வாழ்கிறான். இறுதியில் அனைத்தும் சுபம். அவன் பெற்றோர் விரும்பியதைப் போலவே நம்மாள் ஒரு மேஸ்ட்ரோ ஆகிறான்.
வில் ஹண்டிங் ஒரு -- நம்மூர் மொழியில் -- தறுதலை. 18 வயதில் ஊர் சுற்றுகிறான், சண்டையில் இறங்குகிறான், கைதாகிறான்.... அதே நேரத்தில் இவன் ஒரு கணித மேதை -- அவனுக்கு பட நினைவு (photographic memory) இருக்கிறது என்பதும், எந்த ஒரு விஷயத்தையும் அவன் ஒரு முறை படித்தால்/பார்த்தால் மறப்பதில்லை என்பதும் நம்க்குத் திரைப்படம் போகப் போகப் புரிகிறது. என்னதான் பொறுக்கியாக இருந்தாலும் அவன் கண்ட இடத்தில் வேலை செய்வதில்லை -- MIT-யில் துப்புறவாளனாக வேலை செய்கிறான்... இந்த மிகச் சிறந்த கல்வி நிறுவனத்தின் மாணவர்களாலும் பேராசிரியர்களாலும் தீர்க்க முடியாத கணிதப் புதிர்களைத் தீர்க்கிறான். ஒரு கணிதப் பேராசிரியர் இவன் திறமையைப் பார்த்து இவனை நல்வழிக்குக் கொண்டு வர உதவி செய்ய முற்படுகிறார் -- இவனைச் சட்டத்தின் பிடியில் இருந்து விடுவித்துத் தன்னுடன் வைத்துக் கொள்கிறார். இவனுடைய கோபத்திற்கும், மன நிலைக்கும் தீர்வு காண ஒரு மன நல மருத்துவரின் உதவியை நாடுகிறார். வில்லுக்கோ இது எதுவும் பிடிக்கவில்லை. அவனுக்கு அவனுடைய சிறிய வட்டத்தை விட்டு வெளியே வரப் பிடிக்கவில்லை. அவன் காதலி கேட்டும் அவளுடன் செல்ல மறுக்கிறான் -- சண்டை போடுகிறான். இந்த ஒரு ஆச்சரியமான மூளைக்குப் பின்னணியில் குடிகாரத் தந்தையால் சிறு வயதில் இவன் பட்ட துன்பங்கள் வெளி வருகின்றன.. நம் மருத்துவரின் உதவியுடன் எப்படி இவன் தன் விருப்பத்தினை நோக்கிப் பயணிக்கிறான் என்பதை அழகாகக் காட்டுகிறது "குட் வில் ஹண்டிங்".
இத்திரைப்படங்கள் முற்றிலும் வேறுபட்ட கதைக் களத்தில் அமைக்கப்பட்டவை -- அதே நேரத்தில் அழகான ஒற்றுமையைக் கொண்டவை. பாருங்கள், பார்த்து அடுத்தவருக்குச் சொல்லுங்கள்.