Friday, July 15, 2011

இணையமும் நம்முடைய ஞாபக சக்தியும்

ஒரு பத்து வருடத்திற்கு முன்னர் நம்மில் எத்தனை பேர் தெரு மூலையில் இருக்கும் ஒரு டீக்கடைக்கு தினத்தந்தி பார்ப்பதற்கென்றே சென்றிருக்கிறோம்? எத்தனை பேர் நூலகத்தில் மணிக்கணக்கில் அமர்ந்திருக்கிறோம்? ஆனந்த விகடனோ, இந்தியா டுடேயோ, ஹிண்டு பேப்பரோ எத்தனை பேர் கடைக்குச் சென்று காத்திருந்து வாங்கி வந்திருக்கிறோம்? இந்த இணைய யுகத்தில் இவையெல்லாம் செய்கிறோமா? அனைத்தையும் நாம் கூகிள் செய்து விடுகிறோம். எந்நேரமும் இணையத்திலேயே இருக்கும் நம்மில் பலருக்கு அந்த இணையம் நம்மில் எந்த விதமான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பது தெரிவதில்லை.  இப்போது,  எந்த ஒரு செய்தியையும் நாம் நினைவில் வைத்திருப்பதில்லை. நம்முடைய நாட்டின் மூன்றாவது பிரதமர் யார்? கர்னாடகத்தில் எத்தனை நதிகள் ஓடுகின்றன? சிக்கிம் மாநிலம் எங்கிருக்கிறது? இவை எல்லாம் தெரிந்திருந்தால் தான் ஒருவரை அறிவாளியாகக் கண்டு கொண்ட நாள் நம் அனைவருக்கும் தெரியும். இப்போதெல்லாம் நாம் எந்த ஒரு புத்தகத்தையும் படித்து மனப்பாடம் செய்யத் தேவை இல்லை. அனைத்திருக்கும் இருக்கவே இருக்கிறது "Google".

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தின் அறிவியலாளர்கள் இந்த கூகிளால், பொதுவாக இணையத்தால் நம் மூளையில், நம்முடைய நினைவு சக்திக்கு, என்ன விளைவுகள் வருகிறது என்று அறிவியல் பூர்வமாக பல பரிசோதனைகளைப் பலர் மீது நடத்தியிருக்கிறார்கள். அவர்கள் சொல்வது இதுதான்: நாம் இணையத்தின் மீது அளவுக்கு அதிகமாகச் சார்ந்திருக்கிறோம். இணையத்தினை மூளைக்கு ஒரு External memory-யாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமாம். இப்போதெல்லாம் ஒரு கேள்விக்கு பதில் என்ன என்பதை விட எங்கே கிடைக்கும் என்றுதான் அறிந்து வைத்திருக்கிறோமாம்.. உண்மைதானே... யாரோ உங்களிடம் சென்னையிலிருந்து குவகாத்திக்கு எப்படி செல்லலாம் என்று கேட்டால், பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அனுபவத்திலிருந்தோ அல்லது எங்கோ படித்ததிலிருந்தோ பதில் சொல்லியிருப்போம். இப்போதோ அதெல்லாம் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. இணையத்திற்கு சென்று ரயில் நேரங்கள் முதல் குவகாத்தியில் தங்குமிடம் வரை அனைத்தையும் இணையத்திலேயே பார்த்து விடலாம்.

நம்முடைய இணையச் சார்பு சற்று அளவிற்கு அதிகமாகச் சென்று கொண்டிருக்கிறது என்றும், நாம் இணையம் இல்லாமல் இருக்கும்போது என்னவோ ஒரு நண்பரையே இழந்தது போலத்தான் உணர்கிறோம் என்றும் இந்த ஆராய்ச்சிக் கட்டுரையை முடிக்கிறார்கள்.

இதென்னமோ மிகவும் சின்ன செய்தியாக இருக்கலாம்... ஆனால் இதைப் போன்ற ஒரு ஆய்வினை systematic-ஆக செய்திருப்பது இப்போதுதான். இந்த ஆய்வின் முடிவுகள் மிகவும் சிறந்த Science இதழில் வெள்வந்திருக்கின்றன. கால்குலேட்டரால் சீரழிந்து போன கூட்டல் கழித்தல் பெருக்கல் அறிவு போல நம்முடைய நினைவு சக்தியும் சீரழிந்து போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Tuesday, July 12, 2011

ரங்க ராட்டினம் சுத்தலியோ.... ரங்க ராட்டினம்!!!

 நம்ம ஊரு திருவிழாவுக்கெல்லாம் வருமே ரங்க ராட்டினம்... அதே தான், என்ன இது உலகத்துலயே பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய... ச்சீ ச்சீ... உயரமான (steepest) ரங்க ராட்டினமாம்... ஜப்பான் நாட்டுல ஃபுஜியோஷிடாவில் இருக்குற இந்த ராட்டினத்தின் மொத்த நீளம் ஒரு கிலோ மீட்டருக்கும் மேலயாம்... கிட்டத்தட்ட ரெண்டு நிமிஷம் ஆகுமாம் முடியறதுக்கு... நம்ம ஊர்லயெல்லாம் சவால் விடுவாங்கள்ள... முந்தானாள் தின்னதெல்லாம் வெளிய வந்துரும் அப்பிடின்னு, அது இங்க சத்தியமா அது நடக்கும் போல... கீழ இருக்குற சலனப் படத்தைப் பாருங்க... தலை சுத்தும். 

நான் ஒரு வாட்டி டிஸ்னி லாண்டுக்குப் போயிருக்கும்போது (அனஹைம், கலிஃபோர்னியா) அங்க கலிஃபோர்னியா ஸ்க்ரீமின்' (California Screamin') அப்பிடீன்னு ஒரு ராட்டினம். நம்ம ஜப்பான் காரங்க மாதிரி ரெண்டு நிமிஷமெல்லாம் கிடையாது, ஒரே ஒரு நிமிஷம் தான் அதுக்குள்ள பெண்டு நிமிந்துருச்சு... என்னா ஓட்டம் என்னா உயரம் அப்பிடீன்னு அசந்து போயிட்டேன்... எனக்குப் பக்கத்துல ஒரு சின்னப் பொண்ணு, ஒரு பத்து பதினொரு வயசுதான் இருக்கும். என்னையப் பாத்து "Put your feet down, it helps" (காலைக் கீழ வெச்சுக்கோ, உதவியா இருக்கும்) அப்பிடீன்னுச்சு... ரொம்ப அனுபவ சாலி போல இருந்துச்சு... இதுக்கு முன்னாடி போயிருக்கியா தாயீ அப்பிடின்னேன்... "A few times" அப்பிடின்னுச்சு... சரிடான்னு நானும் காலை அமுக்கி வெச்சுக்கிட்டேன்... கெளம்புனப்புறம் தான் தெரிஞ்சுச்சு... காலைக் கீழ வெக்கலின்னா வயித்துல இருக்குறதெல்லாம் வெளிய வந்திருக்கும்னு... அந்த உயரத்துக்கே நான் கலங்கிட்டேன்... ஜப்பான்ல எப்பிடி இருக்கும்னு என்னால நெனச்சுக் கூட பாக்க முடியல... 


ஜப்பான்ல இருக்குற தக்கபிஷா (takabisha) ராட்டினத்தைக் கட்டி முடிக்க 37 மில்லியன் US டாலர் செலவாச்சாம்... இந்த மாசம் பதினாறாம் தேதி (ஜூலை 16, 2011) திறக்கப்போற இந்த ராட்டினத்துல சுத்தி வர்றதுக்கு 12 டாலராமாம். ஒரு கணக்கு வாத்தியாரு 3 மில்லியன் டிக்கட் வித்தா அத சம்பாதிச்சுரலாம்னு கணக்கு போட்டு சொல்லியிருக்காரு. 

சனங்களே, சகோதர சகோதரிகளே, திரைகடல் ஓடி திரவியம் தேடுறீங்களோ, படிக்கிறீங்களோ, ஊர் சுத்துறீங்களோ, இல்ல அப்பா சேத்து வெச்ச சொத்தக் கரைக்கிறீங்களோ என்னமோ பண்ணுங்க... இந்த ராட்டினத்துல ஒரு வாட்டி சுத்தி வந்துட்டு எப்பிடி இருக்குன்னு வாந்தி... ச்சீ... எழுதுங்க!!

பொழுதுபோக்க எதாச்சும் கண்டுபிடிங்கடான்னா இப்பிடி கொல வெறியோட தான் திரியுறாய்ங்க... 

அன்புடன் மதி.

அதே மாதிரி போட்டுக் குடுங்க சார்...

தமிழ்த் திரைப்படங்களானாலும் சரி, பொதுவாக இந்தியத் திரைப்படங்களானாலும் சரி, பாடல்கள் இல்லாமல் இருக்காது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில படங்கள் பாடல்கள் இல்லாமல் வந்தாலும், ஒரு படத்தினை ஆண்டாண்டு காலங்கள் நினைவில் நிறுத்துவது என்னமோ பாடல்கள் தான். தேவர் மகன் படத்தின் முழுக் கருவையும் "வானம் விட்டு வந்த..." என்ற சோகப் பாடல் சொல்லி விடும். முதல் மரியாதையின் அனைத்துப் பாடல்களையும் கேட்டால் அந்தப் படத்தின் ரசம் நம்முள் மீண்டும் ஒரு முறை இறங்கி விடும். "தமிழா தமிழா..." பாடல் ரோஜாவின் உயிரோட்டத்தைச் சொல்லி விடும்.

அனைவரும் பிறவிக் கலைஞராக இருக்க முடியாது. சிலர் காலம் காலமாகக் கற்றும், பயிற்சி செய்தும் மாத்திரமே ஒரு துறையில் சிறப்படைய முடியும். அவ்வாறு கற்கும் போது நம்முடைய குருவின் சாயல் நம்முடைய படைப்பிலும் இருப்பதைத் தவிர்ப்பது என்பது மிகக் கடினம். உந்துதல் (inspiration) என்பதற்கும் மாதிரி (copy) என்பதற்கும் நூலிழை அளவுதான் வேறுபாடு இருக்கிறது என்பது என் எண்ணம். உதாரணம், பெரும்பாலான ரகுமானின் இசையானது மேற்கத்திய இசையால் உந்தப் பட்டது. தேவாவின் பல பாடல்கள் மேற்கத்திய இசையை மாதிரி எடுக்கப்பட்டவை (ஓ நெஞ்சே & Backstreet Boys, அகிலா அகிலா & Bob Marley). இப்படி பல பாடல்களின் மூலப் பாடல்கள் தெளிவாகத் தெரிந்தாலும் சில பாடல்களின் கரு, ராகங்கள், வரிகள், அல்லது அமைப்பு அதற்கு முன்னர் கேட்டது போலவும் பார்த்தது போலவும் இருப்பதுண்டு. அதைப்போன்ற சில பாடல்களை இங்கே தொகுத்துள்ளேன். ஒரே இயக்குனரின் அல்லது இசையமைப்பாளரின் பாடல்கள் ஒன்று போலவே அமைவதுண்டு. அவற்றை இங்கே தவிர்த்துள்ளேன். (உதாரணம்: யுவனின் சக்கைப் போடு போட்டானே (தாஸ்) & அடடா மழைடா அடை மழைடா (பையா)).

மதறாஸப்பட்டினம் படத்தை டைட்டானிக் அல்லது லகான் படத்தின் மறுபதிவு என்று சொல்லுவேன். அதை உறுதிப் படுத்துவது "பூக்கள் பூக்கும் தருணம்" பாடல். சைந்தவியின் குரலும் கவிஞரின் வரிகளும் (நா. முத்துக்குமார்?) பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்க வைப்பினும் அந்த ஆங்கில வரிகள் வரும்போது எனக்கு லகானின் காலத்தால் அழியாத "ஓ ரே சோரி..." பாடல் தான் நினைவிற்கு வரும். கீழே இரண்டு பாடல்களின் சலனப் படங்கள்.


இப்போதுதான் நினைவிற்கு வருகிறது இந்தப் படங்களின் இன்னொரு ஒற்றுமையும். லகான் படத்திலும் மழையைப் பற்றி ஒரு பாடல் வரும். மதறாசிலும் அதே போல் ஒரு பாடல் (மேகமே...)  இருப்பதை நான் சொல்ல வேண்டாம். அது சரிதான். லகானை எடுப்பது என்றான பின், பாட்டை ஏன் விட்டு வைக்க வேண்டும். இதில் கூத்து என்னவென்றால் இதே இயக்குனர் தெய்வத்திருமகள் படத்தில் நம் அன்பிற்குரிய விக்ரமை "சாம்" ஆக நடிக்க வைத்திருப்பதுதான். தெய்வத்திருமகள் பார்ப்பதற்கு முன் மறந்தும் கூட "ஐ ஆம் சாம்"- படத்தைப் பார்த்து விடாதீர்கள் -- விக்ரமின் கடின உழைப்பை பாராட்டாமல் போய் விடுவீர்கள்.

செல்வராகவன் யுவனிடம் இருந்து பிரிந்த உடன் வந்த இரண்டு படங்கள் யுவனின் "சர்வம்" மற்றும் செல்வாவின் "ஆயிரத்தில் ஒருவன்".. இரண்டு படங்களிலும் ஒரே மாதிரி பாடல் இடம்பெற்றிருப்பது ஒரு coincidence ஆக மட்டும் இருந்து விட முடியாது. நமக்காகவே இந்த இரண்டு பாடல்களையும் கலந்து கட்டி கீழே இருக்கும் சலனப் படத்தில் அடித்திருக்கிறார்கள்!!


இன்னும் சில பாடல்களைச் சேர்ப்பதாக இருந்தேன்.. வேறு ஒரு நாளில்.

அன்புடன் மதி.

பி. கு. தலைப்பின் அர்த்தத்தை விளக்க வேண்டாம் என நினைக்கிறேன். என்னதான் இசையமைப்பாளர்களை நாம் குற்றம் சொன்னாலும், இயக்குனரின் இந்தக் கேள்விதான் அவர்களை இவ்வாறு இசையமைக்கத் தூண்டுகிறது.

Monday, July 11, 2011

மயக்க ஊசியும் சர சர சாரக் காத்தும்.

ரகுமான், யுவன் சங்கர் ராஜா, ராஜா, ஹாரிஸ் ஆகிய யாரும் புதிய பாடல்களைத் தராத நேரத்தில் கடந்த சில வாரங்களாக நான் 2000-ம் வருடத்திற்கு முந்தைய பாடல்களைக் கேட்டுக் களித்துக் கொண்டிருந்தேன். புதிதாக வந்த எந்தப் பாடலும் மனதில் நிற்காத நேரத்தில் வந்தன "வாகை சூட வா" மற்றும் "யுவன் யுவதி".
முதலாவதிற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். சில பாடல்கள் கேட்கும் படி உள்ளன... வைரமுத்தின் வழக்கமான கிராமத்துக் குறும்போடு வந்திருக்கிறது "சர சர சாரக் காத்து வீசும் போதும்"... சின்மயி மிகவும் நன்றாகப் பாடியிருக்கிறார் -- நீண்ட நாட்கள் கழித்து... என்னதான் இந்தப் பாடல் எங்கோ கேட்ட உணர்வைக் கொடுப்பினும், கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. "மொடக்கத்தான் ரசம்...", "இத்துப் போன நெஞ்சத் தெக்க", "டீயைப் போல ஆத்துற.." போன்ற வைரமுத்துவுக்கே உரிய குசும்பான வரிகளோடு வந்திருக்கிறது.
இதே படத்தில் வேறு சில பாடல்களும் நன்றாகத்தான் உள்ளன. "தஞ்சாவூரு மாடத்தி..." பாடல் சிறிய பாடலாய் இருந்தாலும் ஜெயமூர்த்தியின் குரல் திரும்பத் திரும்பக் கேட்க வைக்கிறது. இவர் "mainstream" பாடகரா என்பது தெரியாது, இருந்தாலும் இவரைப் போன்ற அமெச்சூர்களால் தான் இப்படிப்பட்ட ஒரு துள்ளலோடு பாட முடியும். "போறானே போறானே" பாடலின் ஆரம்ப குழல் இசை "நான் போகிறேன் மேலே மேலே..." (நாணயம்) பாடலை நினைவு படுத்துகிறது. 

"யுவன் யுவதி" படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைத்திருக்கிறார். ஆறு பாடல்கள் இருப்பினும், மனதில் நிற்பது என்னவோ "மயக்க ஊசி..." மட்டும்தான். விஜய் பிரகாஷ் கடந்த இரு வருடங்களாக அத்தனை நல்ல பாடல்களைப் பாடி வைத்து விட்டார்... இவர் நீண்ட நாட்கள் களத்தில் இருக்க வேண்டும் என்று நமக்கு ஆசை. இந்தப் படத்தில் துள்ளலாக சில பாடல்கள் உள்ளன என்பதை மறுக்க இயலாது. குத்துப் பாட்டு ரசிகர்களுக்கென்றே "கொலக் குத்து". 


சமீப காலமாக பழைய மற்றும் புதிய ஹாலிவுட் மற்றும் இன்னபிற நாட்டுப் படங்களைப் பார்த்துள்ளேன். அவற்றைப் பற்றி கூடிய சீக்கிரம் எழுத முயற்சிக்கிறேன். 

அன்புடன், 
மதி.