Saturday, June 25, 2011

திரையிசைக் கவிதையில் உரையாடல்கள் - 1

இந்தப் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. அனைத்து விதமான காரணங்களுக்காகவும்: இசை, பாடகர்கள், நடிக நடிகையர், நடனம், கவிஞர், படப்பிடிப்பு, கவித்துவம், போன்ற அனைத்திற்கும்! நான் இங்கே காட்டப் போவது ஒரு சில வரிகள் மட்டும்தான். இந்த வரிகள் எந்தப் பாடலில் இடம் பெற்றிருக்கின்றன என்று சொல்லப் போவதில்லை.

*****

"தாமரை மலர் கொண்டு
உடல் செய்த ஓவியமே,
என்னுடல் பாரம் மட்டும்
எந்த விதம் தாங்குகிறாய்?"

"மீன்களைச் சுமப்பதொன்றும்
நீருக்கு பாரமில்லை;
காதலைச் சுமக்கையிலே
காதலனும் பாரமில்லை!"

*****

இந்த பூமியே தீர்ந்து போய்விடில்
என்னை எங்கு சேர்ப்பாய்?

நட்சத்திரங்களைத் தூசு  தட்டி நான்
நல்ல வீடு செய்வேன்.

நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகிப் போய்விடில் என் செய்வாய்?

உருகிய துளிகளை ஒன்றாக்கி
என்னுயிர் கொண்டே உயிர் தருவேன்.

ஏ ராஜா... இது மெய்தானா?

ஏ ராணி,
தினம் நீ செல்லும்
பாதையில் முள்ளிருந்தால் நான்
பாய் விரிப்பேன் என்னை...

நான் நம்புகிறேன் உன்னை!!

*

நீச்சல் குளமிருக்க
நீரும் இல்லை இனி
எங்கு நீச்சல் அடிப்பேன்?!

அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லி ராணி குளிக்க!!!

இந்த ரீதியில் அன்பு செய்தால்
என்னவாகுமோ என் பாடு?

காற்று வந்து உன் குழல் கலைத்தால்
கைது செய்வதென ஏற்பாடு!!

பெண் நெஞ்சை
அன்பால் வென்றாய்...

ஏ ராணி...
அந்த இந்திர லோகத்தில்
நான் கொண்டு தருவேன்
நாளொரு பூ வீதம்...

உன் அன்பு அது போதும்!!!

*****

தாமரையே தாமரையே
நீரில் ஒளியாதே...
நீ நீரில் ஒளியாதே!!
தினம் தினம் ஒரு சூரியன் போல
வருவேன் வருவேன்...
அனுதினம் உன்னை
ஆயிரம் கையால்
தொடுவேன் தொடுவேன்!

சூரியனே, சூரியனே
தாமரை முகவரி தேவையில்லை!!
விண்ணில் நீயே இருந்து கொண்டே
விரல் நீட்டித் திறக்கிறாய்!
மரங்கொத்தியே, மரங்கொத்தியே!
மனதைக் கொத்தித் துளையிடுவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்துத்
தூங்கும் காதல் எழுப்புவாய்!!

*****

இப்போது நினைத்தால் அவ்வளவு பாடல்கள் நினைவிற்கு வருகிறது... இன்றைக்கு இது போதும்... ஒரே ஒரு வருத்தம் தான் -- இதில் என்னுடைய சொந்த சரக்கு எதுவும் இல்லை என்பதுதான்.. அதனால் என்ன, என்னால் முடிந்த வரை என்னுடைய ரசனையை வெளிப்படுத்துகிறேனே, அது போதும் எனக்கு.

மீண்டும் சந்திக்கும் வரை,
அன்புடன் மதி. 

Sunday, June 12, 2011

தூக்கம்

விளக்கின் வெளிச்சம்,
தூக்கம் இல்லை.
விளக்கணைத்த பின்னர்
சூழ்ந்த இருட்டும்
கண்ணை இருட்டவில்லை.
போர்வையும் போர்த்தினேன் - 
இமை மூடிய
இருட்டும் போதாததால்.
மூடிய இமைக்கும், 
போர்த்திய போர்வைக்கும், 
இடையில் சிரிக்கும் என்
வெளிச்சக் காதலியை 
எப்படித் துரத்தி
என் உறக்கத்தை
அணைப்பேன்?



Friday, June 10, 2011

இணையம் எனும் போதை

காலை எழுவது முதல் இரவு தூங்கும் வரை ஒரு நாளில் நான் செலவிடும் 15-16 மணி நேரத்தில் பாதிக்கும் மேலான நேரம் இணையத்தில் தான் செலவிடப் படுகிறது என்பதை நினைத்துப் பார்க்கும் போது நான் எந்த அளவிற்கு இந்த போதைக்கு அடிமைப் பட்டிருக்கிறேன் என்று அதிர்ச்சியாக இருக்கிறது. எனக்கும் குடித்து விட்டு கவிழ்ந்து கிடக்கும் யாருக்குமே உபயோகமில்லாத ஒரு குடிகாரனுக்கும் என்ன வித்தியாசம் எனத் தெரியவில்லை. நான் இந்த உலகில் தனியனா எனில் இல்லை... எனைப் போல எத்தனையோ பேர் இந்த போதைக்கு அடிமையாகி நாசமாகிக் கொண்டிருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

எப்படி இந்த ஒரு நிலைமைக்கு வந்தேன்; ஏன் இப்படி சீரழிந்து கிடக்கிறேன் என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் விழிக்கிறேன்... காலை எழுந்தவுடன் தொலைபேசியில் மின்னஞ்சல் பார்ப்பதோடு தொடங்கும் என் நாள். அப்படியே அங்கிருந்து ஃபேஸ்புக், செய்தித் தளங்கள், ஊரில் என்ன நடக்கிறது, திரையுலகில் என்ன நடக்கிறது, கிரிக்கெட் என்னாயிற்று, ஃபேஸ்புக்கில் யார் என்ன செய்து கொண்டிருக்கார்கள், என்ன பகிர்ந்து கொண்டனர், யார் என்னைப் புதிதாகத் தொடர்கிறார்கள், புகைப்படங்கள், மின்வணிகத் தளங்களில் சிறிது நேரம் என்று அடுத்த ஒரு மணி நேரம் இப்படிக் கழிகிறது... அங்கிருந்து பணிக்குச் சென்றதும், என்னுடைய துறையில் என்ன நடக்கிறது, ஆராய்ச்சியில் என்ன புதிதாய் வந்துள்ளது, என்று அங்கே ஒரு மணி நேரம். இவை நடப்பதனைத்தும் என் பணியைச் செய்து கொண்டே (multitasking- என்றொரு இழவு). பணியில் புதிதாய் வந்த பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று மீண்டும் இணையத்தின் துணை நாடல்... அதற்காகப் படித்துக் கொண்டும், தேடிக் கொண்டும் இருக்கும் போதே பல்வேறு கவனச் சிதறல்கள் -- இணையத்தில் இருந்துதான்... அப்படியே தினம் கடந்து வீட்டிற்கு வந்தும் கூட மீண்டும் இணையம், ஃபேஸ்புக், ஜி-மெயில், இத்யாதி இத்யாதி... புதிய பாடல்கள், படங்கள், என்று மெத்தையில் கிடக்கும் வரை நோண்டிக் கொண்டே கடந்து விடுகிறது நாள்... மறுநாள் இதே கதைதான்... இப்படி நடப்பது எனக்கு மட்டும் தானா? இல்லை பெரும்பாலானவருக்கு இதே கதிதானா? மதுவில் வீழ்ந்தவருக்கும், புகையில் அடிமையானவருக்கும் நடத்தப்படும் மறுவாழ்வு மையங்கள் எனக்கும் (நமக்கும்) தேவையா?

2005-ற்குப் பிறகுதான் எனக்கு இந்த நிலைமை. அதற்கு முன் இணையத்திற்குத் தடையில்லாத் தொடர்பு இருந்ததில்லை. அப்போது நான் அடிமைப்பட்டுக் கிடந்தது புத்தகங்களுக்கு. நாள் போவதே தெரியாமல் 6 - 7 மணி நேரமெல்லாம் புத்தகத்தில் மூழ்கிக் கிடந்திருக்கிறேன்... என் மூளை புதிய அறிவினைத் தேடித் தேடிப் படிக்கச் சொல்கிறது...

இப்படி ஒரு நிலைக்கு எதாவது பெயர் இருக்கிறதா? யாரேனும் இந்தப் போதையில் இருந்து வெளியே வர ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்களா? கடுமையான பயிற்சி வேண்டுமா?  இதை நிறுத்தாவிட்டால் நான் இறந்து விடுவேன் என்ற ஒரு நிலை, உயிர் பயம், வர வேண்டுமா? யோகாசனம் செய்ய வேண்டுமா? வேலையில் ஒரு பொறுப்பு வர வேண்டுமா? இதற்கெல்லாம் விடை இணையத்தில் இருக்கிறது என்று எனக்கும் தெரியும்... ஆனால் அங்கே சென்று விடை தேடி மீண்டும் இதே புலம்பலைப் புலம்ப நான் தயார் இல்லை. நீங்கள்?


-மதி.

PS: எனக்குத் தெரிந்த வரையில் கீழ்க்கண்ட வழிகள் கண்டிப்பாக உதவும்.

  1. இணையத்தின் துணையின்றி புதிதாய் எதாவது கற்றுக் கொள்ளல்: உதாரணமாக ஒரு இசைக் கருவி, சமையல்,அல்லது ஒரு விளையாட்டு (டென்னிஸ்)
  2. செயல் அல்லது வாழ்க்கைத் துணை ஒருவர் (Activity or Life Partner)
  3. கணிப்பொறியை முடிந்தளவு தவிர்த்தல்
  4. பணியிடத்தில் இணையப் பயன்படுத்தலில் கட்டுப்பாடுகள் கொண்டு வருதல்
உங்களுக்காக ஃபேஸ்புக்கில் என் நண்பர் ஒருவர் பகிர்ந்து கொண்ட சலனப்படம்

Wednesday, June 8, 2011

அனு(Honey)ராதா ஸ்ரீராம்

சுசீலா, ஜானகி, அல்லது சித்ரா அளவுக்கு வரவில்லை என்றாலும் அனு தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த பாடகிகளில் ஒருவர். பொதுவாகவே எனக்கு பெண்குரலில் மட்டுமே உள்ள பாடல்களில் அவ்வளவு விருப்பம் இல்லை -- ஒரு சில தனித்துவம் மிக்கப் பாடல்களைத் தவிர் (கண்ணாளனே, கள்வரே, கன்னத்தில் முத்தமிட்டால் போன்றவை).

இருந்தாலும், அனுவின் ஒரு சில பாடல்களை இங்கே தொகுக்க வேண்டும்.. அவர் பாடியதில் எனக்குப் பிடித்தவை பெரும்பாலும் ஜோடிப் பாடல்கள்.

முதல் பாடல், அவர் சங்கர் மகாதேவனுடன் பாடிய "தின்னாதே..." இந்தப் படத்தில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் இந்தப் பாடலில் எனக்குப் பிடித்தது சிம்ரன் இல்லை, அனுராதாதான்... "சீச்சீச்சீ... " என்று ஆரம்பிக்கும் போதுதான் பாடலே ஆரம்பிப்பது போல எனக்கு ஒரு பிரமை. 

"உனை நினைத்து நான் விழித்திருந்தேன்... இரவுகளில் தினம் வண்ண நிலவுக்கு துணையிருந்தேன்..." என்று இந்தப் பாடலில் பாடும்போது ஏக்கம் வருவது விஜய்க்கு மட்டுமல்ல... நமக்கும் கூடத்தான்! 

இதே படத்திலேயே வரும் "எந்தன் குயிலெங்கே" பாடலும் கூட அனுவுடைய முத்து தான். 

அனுராதா அவ்வளவுதான் என்று அனைவரும் நினைத்திருந்த போது "ராவணன்" படத்தில் "காட்டுச் சிறுக்கி... " மூலம் மீண்டும் நம்மை மகிழ்ச்சியடைய வைத்தார்... 


"மல்லிகையே மல்லிகையே..." பாட்டில் விதிகளுக்கு உட்பட்டுப் பாட சித்ராவையும், குறும்பு கலந்து பாட அனுவையும் தேவா உபயோகித்திருப்பார்... அங்கங்கே சிரிப்பைக் கலந்து மனதைக் கொள்ளை கொள்வதென்னவோ அனுதான். 



தேவா எந்த அளவுக்கு தன்னுடைய சொந்த இசையை உபயோகிப்பார் என்பது அனைவருக்கும் தெரியும்... இந்தப் பாட்டு கூட அப்படி ஒரு பாட்டு தான் என்று எனக்கு இப்போது தான் தெரியும் -- இருந்தாலும் "இங்கு தேள் கடித்தாலும் தெரிவதில்லை, என்னாச்சு என்னாச்சு எனக்கும்..." என்று பத்தாண்டுகளுக்கும் மேலாக கேட்டாயிற்று... அனுவுக்காக "ஒரு பொண்ணு..."



"அன்பென்ற மழையிலே" பாட்டுதான் இவர் பாடியதிலேயே சிறந்த பாடலாக இருக்க வேண்டும்... ஒரு பாடகருடைய திறமையை முழுதாக உபயோகிப்பது ரஹ்மான் தான். 



"அப்படிப் போடு" இல்லாமல் இந்தப் பகுதி முழுமையடையாது. தமிழ் நாட்டையே ஆட வைத்த பாடல்.. இதில் "இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா..." என்று கேள்வி வேறு... 

அய்யய்யோ, முடிஞ்சுருச்சுன்னு பாத்தா, ஒரு கலருக்கே தமிழ் நாட்டுல ஒரு புது மரியாதையைக் கொண்டு வந்த "கறுப்புதான் எனக்குப் புடிச்ச கலரு..." இல்லாம எப்பிடி? 

இன்னும் எவ்வளவோ இருந்தாலும், எனக்கு இந்த நேரத்துக்கு ஞாபகம் வந்தது இவ்ளோதான்... 

மீண்டும் சந்திக்கும் வரை.... 
--மதி. 

Saturday, June 4, 2011

திரையிசைப் பாடல்களில் மாதங்கள்

தொண்ணூறுகளிலும் அதற்கு முன்னரும், சென்னை வானொலியில் தொகுப்புப் பாடல்களை ஒலிபரப்புவார்கள்... ரசிகர்களுக்கும் கேள்விகள் கேட்டு அனுப்புவார்கள்... பூக்கள் பற்றிய பாடல்கள், நிலாவைப் பற்றிய பாடல்கள், சோகப் பாடல்கள், காலையைப் பற்றிய பாடல்கள் என்று பல தொகுப்புகளை ஊரில் உள்ளோரெல்லாம் சேர்ந்து எழுதிப்போட்டு நமது தொகுப்பினை ஒலிபரப்புவார்களா என்று காத்துக் கிடப்பார்கள்.... ஒரு நல்ல பொழுதுபோக்கும் கூட!

என்னமோ தெரியவில்லை, திடீரென்று எனக்கு மாதங்களைப் பற்றிய பாடல்களைத் தொகுக்க வேண்டும்.. youtube உதவியோடு களம் இறங்கி விட்டேன். நமது தொகுப்பினை எங்காவது ஒலிபரப்புவார்களா என்று காத்துக் கிடக்க வேண்டியதில்லை! நாமே செய்து விடலாமே...

ஜனவரி குறித்து கடைசியில் சொல்கிறேன். ஏப்ரல் மாதத்தில் குறைந்தது இரண்டு பாடல்கள் எனக்கு நினைவிற்கு வருகிறது: இதயம் திரைப்படத்தில் இருந்து "ஏப்ரல் மேயிலே" மற்றும் வாலி படத்தில் இருந்து "ஏப்ரல் மாதத்தில்".
இந்தப் பாடலில் குறும்புதான் முக்கியம். வயதான இளையராஜா பிரபுதேவாவுக்குப் பாடுவதைக் கேட்பது சற்று வித்தியாசமாக இருந்தாலும் ரசிக்கும்படியான பாடல்.

"இதயம் திருடுதல் முறையா? அந்தக் களவுக்கு தண்டனைகள் இல்லையா?" மற்றும் சில வரிகள் வைரமுத்துவுக்கே உரிய குசும்புடன் அமைந்திருக்கும். இந்தப் பாடலுக்குப் பிறகு உன்னி கிருஷ்ணன் இதைப்போல பல பாடல்கள் பாடியிருப்பினும், இந்தப் பாடலைப் போல அமைய வில்லை!!



தேவன் ஏகாம்பரத்தின் பாடல்களில் எனக்குப் பிடித்த ஒரு சில பாடல்களில் இதுவும் ஒன்று (இரு விழி உனது (மின்னலே), நினைவுகள் தானே (கண்டேன் படப் பாடல்), ஸ்மையாய் (கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்) போன்றவை வேறு சில பாடல்கள்).
"பெண்: போ போ என்ற சொல்லுக்கு வா வா வா என்று அர்த்தமே, அகராதி இங்கு மாறும் அன்பே...." "ஆண்: ஆடைக்குள் மூடி நிற்கிறாய், அது கூட வேறு அர்த்தமா... ஆஹாஹா புரிஞ்சு போச்சு அன்பே" என்று நோகாமல் எழுத வைர முத்துவால் மட்டும் தான் முடியும். (அவர்தானே எழுதினார்?)

மே மாதம் 98-ல் பாட்டு கூட நல்ல பாட்டுத்தான், ஆனா இங்கே வேண்டாம் :-)

பிரியமானவளே படத்தில் பிடிக்காத பாட்டு இது... இருந்தாலும், மாதக் கணக்குக்காக, ஜூன் ஜூலை மாதத்தில்.

வரிசையாக விஜய் படப் பாடல்களே அமைகின்றன. என்னவோ தெரியவில்லை.. கார்த்திக் குரலுக்காகவும், ரீமா சென்னுக்காகவும் கண்டிப்பாக ஜூலை மலர்களே பாடலை ரசிக்கலாம்.

ஆகஸ்ட் மாதத்திற்கு எனக்குப் பாடல் கிடைக்கவில்லை... ஆனால், வந்தே மாதரம் பாட்டை வைத்திக் கொள்ளலாமே... இப்போதெல்லாம் (இந்தப் பாடல் வெளி வந்த காலத்தில் இருந்தே) இதைப் பல இடங்களில் தேசிய கீதமாகவே பாடுகிறார்கள்... ஜனகண மண தேசிய கீதம் தான்... அவ்வப்போது ஒரு மாற்றத்துக்கு நமக்குப் புரிந்த மொழியில் பாடுவதில் தவறில்லையே!!


அலைபாயுதே படத்தில் இருந்து செப்டம்பர் மாதம் பாடல்.... அக்டோபர் மாதத்திற்கும் இதேதான்... வேறு பாட்டு நினைவிற்கு வரவில்லை.

ரெட் படத்தில் இருந்து நவம்பர் மாதம் பாடல்...  இந்தப் படத்தில் இருந்து 'ஒல்லிக்குச்சி' பாட்டுத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கு.... ஆனாலும் இப்போதைக்கு இதுதான் பொருத்தமாக இருக்கும்...

ஜனவரி நிலவே என்றொரு பாட்டு இருப்பது இந்தப் பதிவை எழுத ஆரம்பித்த பிறகு தான் தெரியும்... முதல்முறை கேட்கும்போதே எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை... அது இங்கே கிடையாது. பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு எனக்குப் பாட்டு கிடைக்கவில்லை..

இன்னும் தமிழ் மாதங்களுக்கென்று ஒரு தனிப் பதிவே எழுதும் அளவுக்குப் பாடல்கள் உண்டு. இங்கே அவை கிடைக்காது. ஒரு மாதிரிக்காக வேண்டுமானால் "வைகாசி நிலவே..." (உன்னாலே உன்னாலே)...
இன்னைக்கு இவ்ளோதான்.. மீதி வேறொரு நாள்.... போயிட்டு வரேனுங்கோ!!!