ஒரு பத்து வருடத்திற்கு முன்னர் நம்மில் எத்தனை பேர் தெரு மூலையில் இருக்கும் ஒரு டீக்கடைக்கு தினத்தந்தி பார்ப்பதற்கென்றே சென்றிருக்கிறோம்? எத்தனை பேர் நூலகத்தில் மணிக்கணக்கில் அமர்ந்திருக்கிறோம்? ஆனந்த விகடனோ, இந்தியா டுடேயோ, ஹிண்டு பேப்பரோ எத்தனை பேர் கடைக்குச் சென்று காத்திருந்து வாங்கி வந்திருக்கிறோம்? இந்த இணைய யுகத்தில் இவையெல்லாம் செய்கிறோமா? அனைத்தையும் நாம் கூகிள் செய்து விடுகிறோம். எந்நேரமும் இணையத்திலேயே இருக்கும் நம்மில் பலருக்கு அந்த இணையம் நம்மில் எந்த விதமான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பது தெரிவதில்லை. இப்போது, எந்த ஒரு செய்தியையும் நாம் நினைவில் வைத்திருப்பதில்லை. நம்முடைய நாட்டின் மூன்றாவது பிரதமர் யார்? கர்னாடகத்தில் எத்தனை நதிகள் ஓடுகின்றன? சிக்கிம் மாநிலம் எங்கிருக்கிறது? இவை எல்லாம் தெரிந்திருந்தால் தான் ஒருவரை அறிவாளியாகக் கண்டு கொண்ட நாள் நம் அனைவருக்கும் தெரியும். இப்போதெல்லாம் நாம் எந்த ஒரு புத்தகத்தையும் படித்து மனப்பாடம் செய்யத் தேவை இல்லை. அனைத்திருக்கும் இருக்கவே இருக்கிறது "Google".
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தின் அறிவியலாளர்கள் இந்த கூகிளால், பொதுவாக இணையத்தால் நம் மூளையில், நம்முடைய நினைவு சக்திக்கு, என்ன விளைவுகள் வருகிறது என்று அறிவியல் பூர்வமாக பல பரிசோதனைகளைப் பலர் மீது நடத்தியிருக்கிறார்கள். அவர்கள் சொல்வது இதுதான்: நாம் இணையத்தின் மீது அளவுக்கு அதிகமாகச் சார்ந்திருக்கிறோம். இணையத்தினை மூளைக்கு ஒரு External memory-யாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமாம். இப்போதெல்லாம் ஒரு கேள்விக்கு பதில் என்ன என்பதை விட எங்கே கிடைக்கும் என்றுதான் அறிந்து வைத்திருக்கிறோமாம்.. உண்மைதானே... யாரோ உங்களிடம் சென்னையிலிருந்து குவகாத்திக்கு எப்படி செல்லலாம் என்று கேட்டால், பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அனுபவத்திலிருந்தோ அல்லது எங்கோ படித்ததிலிருந்தோ பதில் சொல்லியிருப்போம். இப்போதோ அதெல்லாம் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. இணையத்திற்கு சென்று ரயில் நேரங்கள் முதல் குவகாத்தியில் தங்குமிடம் வரை அனைத்தையும் இணையத்திலேயே பார்த்து விடலாம்.
நம்முடைய இணையச் சார்பு சற்று அளவிற்கு அதிகமாகச் சென்று கொண்டிருக்கிறது என்றும், நாம் இணையம் இல்லாமல் இருக்கும்போது என்னவோ ஒரு நண்பரையே இழந்தது போலத்தான் உணர்கிறோம் என்றும் இந்த ஆராய்ச்சிக் கட்டுரையை முடிக்கிறார்கள்.
இதென்னமோ மிகவும் சின்ன செய்தியாக இருக்கலாம்... ஆனால் இதைப் போன்ற ஒரு ஆய்வினை systematic-ஆக செய்திருப்பது இப்போதுதான். இந்த ஆய்வின் முடிவுகள் மிகவும் சிறந்த Science இதழில் வெள்வந்திருக்கின்றன. கால்குலேட்டரால் சீரழிந்து போன கூட்டல் கழித்தல் பெருக்கல் அறிவு போல நம்முடைய நினைவு சக்தியும் சீரழிந்து போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
No comments:
Post a Comment
உங்கள் மனதில் தோன்றும் மகிழ்ச்சியோ காழ்ப்புணர்ச்சியோ சொன்னலொழிய எனக்குத் தெரியாது.